உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களைக் கோருமாறு அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காகக் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்துவிட்டு புதிதாக வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும் எனக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்க முடியாதமையினால் அது குறித்து அமைச்சரவைக்கு அறியப்படுத்தவும், அதற்கான சட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறு, சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
அத்துடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்துவிட்டு மீண்டும் வேட்புமனுக்களைக் கோர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் அண்மையில் கோரியிருந்தார்.