இலங்கையின் ஏற்றுமதி வருவாய் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 24.8 சதவீதம் அதிகரித்து 1, 158 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகள் என்பவற்றின் முதன்மை ஏற்றுமதியின் காரணமாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இரத்தினக்கற்கள், வைரங்கள், ஆபரணங்கள் மற்றும் பொறியியல் சாதனங்கள் என்பவற்றின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விவசாயத் துறையின் ஏற்றுமதி அதிகரிப்பில், தேயிலை, வாசனைத் திரவியங்கள், தெங்குசார் உற்பத்திகள் என்பனவும் தாக்கம் செலுத்தியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களுக்கான ஏற்றுமதி வருவாய் 10, 676 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதத்தில் தொழிலாளர் பணவனுப்பல் 588 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதத்தின் இறுதியில் அந்திய செலாவணி 6.5 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.