இலங்கை மின்சார சபை லாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ள நிலையில், அதன் பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரியுள்ளது.
இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால், இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்குக் கடந்த 2 வருடங்களாக முந்தைய நிர்வாகம் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கியிருக்கவில்லை.
இலங்கை மின்சார சபை நஷ்டம் அடையவில்லை என்றும் அது இலாபத்தில் இயங்கும் நிறுவனம் எனவும் ரஞ்சன் ஜயலால் இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலாலிடம் இது தொடர்பாக எமது செய்திச் சேவை, வினவியபோது, உரிய ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கும்போது, அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரே தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.