கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாமுதுருகந்த பகுதியில் 22.11.2024 நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையின் போது, தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தனமல்வில பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், காணாமல் போன நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நபர் ஒருவருடன் ஹாமுதுருகந்த பகுதிக்கு சென்றதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், காணாமல் போன நபருடன் சென்றதாகக் கூறப்படும் பலஹருவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போனவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தலையை புதைத்துள்ளது தெரியவந்தது.
அதன்படி, உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் ஹரபெகம, தனமல்வில பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் ஊவ குடோஓய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்ததுடன், அவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே மேற்படி பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொலை தொடர்பில் ஊவ குடோஓய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபரான பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.