வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையானது வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினரால் கையளிக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கையானது வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவரை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாணத்தில் ஊழல் ஒழிப்பு, அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.
மேலும், வடபகுதி விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சினையாக உள்ள அவர்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குரிய வாய்ப்புக்கள் குறைவாக உள்ளன என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன், வட மாகாணத்தின் மற்றொரு முக்கிய வளமான மீன்பிடி மூலமாகப் பிடிக்கப்படும் மீன்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன எனவும், அவை உற்பத்திப் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து, வட மாகாணத்துக்குச் சீன அரசாங்கம் தொடர்ச்சியாக உதவிகளைச் செய்யும் என்பதைக் குறிப்பிட்ட சீனத் தூதுவர், சீனாவில் 800 மில்லியன் மக்களின் வறுமையைக் கடந்த தசாப்த காலத்தில் இல்லாதொழித்ததாகவும், அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.