பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் வைத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மினுவாங்கொட பொலிஸாரும் இணைந்து நேற்று (19) பிற்பகல் கம்பஹா கடுவங்கஹா பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 5 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்ட பணத்தில் இருந்து 31,515,291 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.
தம்மிட்ட மாகவிட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுயை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று காலை பணப்பைகளுடன் வேனில் மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றுள்ளனர்.
வங்கிக்கு அருகில் வந்த பிறகு, சாரதி மட்டும் வேனில் இருந்த நிலையில் ஏனையவர்கள் வேனில் இருந்து இறங்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது வேனில் 7 கோடியே 13 லட்சத்து 27 ஆயிரத்து 296 ரூபாய் பணம் இருந்த நிலையில் குறித்த பணத்துடன் சாரதி குறித்த வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் அவர் கம்பஹா உக்கல்கொட பிரதேசத்தில் வேனை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் மற்றுமொரு நபருடன் தப்பிச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.