சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 90 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்களை கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையிலிருந்து இலங்கை சுங்கத்தின் வருமான அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.8 மில்லியன் Pregabalin (Pregab 150mg) கெப்ஸ்யூல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டையில் வர்த்தகர் ஒருவரால் இறக்குமதி செய்யப்பட்ட 36 மர ஒலிபெருக்கி பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் அனுமதியின்றி இந்த மருந்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனைக்காக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்