கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய விரிவுரைகள், மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 25 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய உத்தேச வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், அதனைப் பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சையுடன் தொடர்புடைய வினாக்களுக்கு இணையான வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களைப் பெற்றுத்தருவதாகச் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்களை நேரடியாகவோ அல்லது நிகழ்நிலை ஊடாகவோ விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், குறித்த காலப்பகுதியில் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.