மன்னார் – யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் சுமார் 500 இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் 25 பேருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்போது அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின்போது மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.
இதை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்தியர் தரப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 450 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.