இலங்கையிலுள்ள தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு விடுத்திருந்த பயணக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது.
முன்னதாக அருகம்பைப் பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தெரிவித்து, தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தல் விடுத்திருந்தது.
இதனையடுத்து இஸ்ரேலும் இலங்கையிலுள்ள தங்களது நாட்டு பிரஜைகளுக்கு பயண கட்டுப்பாட்டை விதித்திருந்தது.
இந்தநிலையில் இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கான அச்சுறுத்தல் மட்டத்தைக் குறைப்பதாக இஸ்ரேலிய தேசியப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்காவும் இலங்கைக்கான தமது பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியிருந்தது.
ஏற்கனவே சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பயண கட்டுப்பாட்டைத் தளர்த்துமாறும் இலங்கை அரசாங்கம் அமெரிக்கத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதேநேரம் இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது