- வேட்பாளர் நிமல் லான்சா
இஸ்மதுல் றஹுமான்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகள் வருமானத்தை குறைத்து செலவை அதிகரிக்கும் வாக்குறுதிகளே. அநுர குமார, விஜித்த ஹேரத் என்னுடன் விவாதத்திற்கு வந்தால் அவற்றை நிறைவேற்ற முடியாது என்பதை நிரூபித்துக் காட்டுவேன்
என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கம்பஹா மாவட்டத்தில் புதிய ஜனநாயக கூட்டணியில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் நான்காம் இலக்கத்தில் போட்டியிடும் நிமல் லான்சா வத்தளை, பள்ளியவத்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசும்போது கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மைதிரிபால சிறிசேன வந்தவுடன் 100 நாள் வேலை திட்டத்தை நடைமுறை படுத்தினார். கோதாபய ராஜபக்ஷ வட் வரியை குறைத்தார். சாதாரணமாக ஜனாதிபதிகள் கொடுத்த வாக்குறுதிகளில் சிலதை நிறைவேற்றிவிட்டே அடுத்த தேர்தலுக்குச் செல்வது வழக்கம். அநுர அது ஒன்றையும் செய்யாமல் தேர்தலுக்குச் சென்றார். நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தில் உள்ளோம். எமக்கு தேவையான விதத்தில் வருமானத்தை குறைக்க முடியாது. அப்படிக் குறைப்பதாக இருந்தால் மறுபக்கம் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது எனத் தெரிவிக்க வேண்டும். அதே போல் செலவையும் அரசுக்குத் தேவையான விதத்தில் அதிகரிக்கவும் முடியாது. அதிகரிப்பதாக இருந்தால் அதிகரிக்கப்பட் செலவினத்திற்கான வருமானத்தை ஈட்டும் முறையைக் காட்ட வேண்டும்.
அநுர குமார மேடைகள் தோரும் செலவு அதிகரிப்பு தொடர்பாகவும் வருமானத்தை குறைப்பது சம்பந்தமாகவும் கூறினார். அவர் அரசை பொறுப்பேற்று ஐம்பது நாட்கள் ஆகிவிட்டன. ஆறு மாதம், ஒரு வருடமல்ல ஐந்து வருடங்கள் சென்றாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. அநுர குமார, விஜித்த ஹேரத் என்னுடன் எந்தவொரு விவாதத்திற்கு வந்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதை நிரூபித்துக் காட்டுவேன்.
அநுர குமார மக்கள் முன்னிலையில் செய்ய இருக்கும் பல வேலைகளைப் பற்றிக் கூறினார். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. சொன்ன ஒரு பொய்யைக் கூறுமாறு டில்வின் சில்வா கூறுகிறார். ஒரு பொய் அல்ல ஆயிரம் பொய்களை கூறியுள்ளனர்.
உழைக்கும் போது செலுத்து வரியின் மட்டத்தை அதிகரித்தல், வட்டி வரி குறைப்பு, NBT குறைப்பு, சம்பள அதிகரிப்பு, எரி பொருட்களில் கமிஷன் எடுத்தல், கமிஷன் இல்லாமல் போனால் எரி பொருள் விலை குறைய வேண்டும், உகண்டாவிலிருந்து பணத்தை கொண்டுவருதல் எங்கே இவை ஒன்றும் நடவில்லையே.
இவர்கள் எதையும் விக்கமாட்டோம் என்றனர். ஆனால் திரிபோச நிறுவனத்தை விற்பதற்கு அறிவித்துள்ளார்கள். ரணில் சகலதையும் விற்பதாக கூறிய இவர்கள் திரிபோசவை விற்பதற்காக அமைச்சரவைக்கு சமர்பித்துள்ளனர். இதனை விற்பது என்பது கர்பினித் தாய்மார்கள், குறைந்த வருமானமுள்ளவர்களின் குழந்தைகளுக்கு வழங்கும் போசாக்கு உணவுக்கு அடியாகும். வறிய மக்களின், பெண்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததை மறந்துள்ளனர்.
குடை, மரக்கறி, கஜு தொடர்பாக பேசுவதில் சமூகத்திற்குப் பயனில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்போது என்பதே மக்களின் கேள்வி.
2028ல் கடனை செலுத்த வேண்டும். கடனை செலுத்துவதென்றால் ஒவ்வொரு வருடமும் வருமானத்தை கூட்ட வேண்டும். இவர்கள் கொடுத்த வாக்குறுதியினால் வருமானம் குறைவதை எப்படி மாற்றீடு செய்வது என்பதைக் காட்ட வேண்டும்.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாக நாங்கள் சொன்னோம். இவர்கள் அதனைச் செய்வதில்லை என்றனர். தனியர் மயப்படுத்தினால் நஷ்டம் குறையும். அப்படிச் செய்வதில்லை என்றால் நஷ்டத்தை ஈடுசெய்ய புதிய வருமான முறையை வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது.
ரணில் விக்ரமசிங்க 17 நாடுகளிலிருந்து 16 பில்லியன் டொலர் நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். எமது முன்னேற்றத்தை அவதானித்தே அந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. ஐ.எம்.எப்.இன் மூன்றாவது தவணையை பெறவேண்டி உள்ளது. இன்று இவை அனைத்தும் முடங்கியுள்ளன. தேர்தல் முடியும் வரை இவர்கள் காலக்கெடு கோரியுள்ளனர். தேர்தல் முடிந்ததும் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க மாட்டார்கள். சமர்பித்தால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிவரும். இவர்கள் மார்ச் மாதம் வரை வரவு செலவு திட்டத்தை பிற்படுத்துவார்கள். இவர்களுக்கு சர்வதேச தொடர்போ உலக பொருளாதாரம் தொடர்பாகவோ அனுபவமில்லை.
பிரமுகர் பாதுகாப்பு தேவையில்லை என்றவர்களுக்கு இன்று பாதுகாப்பு தேவைப்பட்டுள்ளது. பொலிஸார் தெரிவித்ததற்காக பாதுகாப்பை பெறுவதாக பிரதமர் கூறுகிறார்.
அலைகளுக்கு வந்தவர்கள் அலைகளாலேயே அடிபட்டுச் செல்வார்கள். நிரந்தரம் இல்லை.
நிகழ்நிலை காப்பு சட்டத்தைக் கொண்டுவரும் போது ஜனநாயகத்தைப் பற்றி பெரிதாகப் பேசினார்கள். தற்போது அந்தச் சட்டத்தை பயன்படுத்தி அவர்களுக்கு எதிராக சமூக ஊடகத்தை பயன்படுத்தியதற்காக ஒருவரை விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
தெரிந்தவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். முன்னர் மக்கள் விடுதலை முன்னணியில் 42 பேர் இருந்தனர். அவர்கள் தற்போது எங்கே?. அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. கம்பஹாவுக்கு என்ன செய்துள்ளார்கள். பொதுமக்கள் தினத்தையாவது நடாத்தவில்லை. அதனால் மக்கள் அறிந்த குழுவினரை பாராளுமன்றம் அனுப்புங்கள் என தெரிவித்தார்.