இணையவழி பண மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 59 பேரில் 57 பேர் தலா 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட ஏனைய இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த போதே இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பெண்களும் அடங்குவர்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,
“இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தில் இருந்து இது குறித்த புகார் கிடைத்தது. கொரியாவில் உள்ள கொரிய பிரஜை ஒருவரின் பணம் இலங்கை நாணயத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.”
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இங்கு பணிப்பாளராக பணிபுரியும் கொழும்பு 07 ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரும், முகாமையாளராகப் பணிபுரியும் ராகமையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் அடங்குகின்றனர்.
இதில் வேறு நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த இடம் வெளிநாட்டில் இருந்து வெளிநாட்டவர்களால் நடத்தப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்