இஸ்மதுல் றஹுமான்
போலியான பிரான்ஸ் நாட்டு வீசாவைப் பயன்படுத்தி பிரான்ஸ்க்கு செல்ல முயற்சித்த இலங்கை இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
வெள்ளிக்கிழமை இரவு 08.35 மணிக்கு சென்னையை நோக்கிச் செல்லும் இண்டிகோ ஈ 6 -1196 இலக்க விமானத்தில் பயணிப்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்திருந்தார்.
அனைத்து விமான நடைமுறைகளையும் முடித்த பின்னர், அவர் விமானத்தில் ஏறுவதற்காக குடிவரவு , குடியகல்வு திணைக்கள கருமபீடத்திற்கு வந்துள்ளார்.
அங்கு குறித்த இளைஞனின் நடத்தை மற்றும் விசாரணைகளின் போது எழுப்பப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் அவரை பிரதான குடிவரவு குடியகல்வு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் எடுத்துச் வந்த பயணப்பொதியை குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்ட போது இந்தியாவில் இருந்து இத்தாலிக்கு பயணிப்பதற்கான விமான நுழைவு அனுமதி பத்திரம் மற்றும் முகக் கவசத்தில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போலியாக வடிவமைக்கப்பட்ட பிரெஞ்சு விசா ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து குறித்த இளைஞனை கைது செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞன் ஆவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.