கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் 07.11.2024 துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
அங்கு சுமார் 2 வருடங்களாக கொள்கலன் அனுமதியில் இழுபறிநிலை காணப்படுவதால், தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
சுமார் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர், அனைத்து முறைகளையும் பின்பற்றினாலும், ஒவ்வொரு நாளும் சுமார் 1,800 முதல் 2,000 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆனால், தற்போது துறைமுகத்தில் இருந்து கொள்கலன்கள் வெளியேறுவதில் பல குளறுபடிகள் நடப்பதாகவும், டோக்கன் முறையில் எண் கொடுத்தாலும் அந்த வரிசையில் கொள்கலன்கள் துறைமுகத்தை விட்டு வெளியேறுவதில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும் சிலர் கடமை நேரங்களில் மது அருந்திக் கொண்டே கடமைகளைச் செய்வதாகவும், சிலர் தங்கள் கடமைகளைப் புறக்கணித்து இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதாகவும் தெரிவித்தனர்.
எனவே, கொள்கலன் வௌியேற்றும் செயற்பாடுகளை மோசடி மற்றும் ஊழல் இன்றி சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அமைச்சரிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.