பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின் கடற்படை தலைமையகத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று (நவம்பர் 06) மேற்கொண்டார்.
இன்று காலை கடற்படைத் தலைமையகத்திற்கு வந்தடைந்த பாதுகாப்புச் செயலாளரை மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க வரவேற்றதுடன் கடற்படையினரால் கௌரவிப்பு மரியாதை அணிவகுப்பு ஒன்றும் வழங்கப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்புச் செயலாளரை அன்புடன் வரவேற்று கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையே நடந்த சுமூகமான கலந்துரையாடலின் போது பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடற்படையின் கட்டமைப்பு, பங்கு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளால் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளர் இங்கு உரையாற்றுகையில், மூன்று தசாப்த கால கொடூர பயங்கரவாத யுத்தத்தை முடிக்க கடற்படையின் பங்களிப்பை நினைவு கூர்ந்ததுடன், நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாப்பதிலும், கடலில் சவால்களை எதிர்கொண்டு தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கும் கடற்படையின் பங்களிப்பைப் பாராட்டினார்.
பாதுகாப்புச் செயலாளர் கடற்படைத் தளபதியுடன் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டதுடன், விசேட அதிதிகள் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.
கடற்படை பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.