- ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் ) வரலாற்றுச் சிறப்பு மிக்க பலாங்கொடை தப்தர் ஜெய்லானி கற்குகைப் பள்ளி வாசலில், முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்படும், 134 ஆவது வருடாந்தக் கந்தூரி பெருவிழா, (22) புதன்கிழமை இரவு மற்றும் (23) வியாழக்கிழமை பகல் வேளைகளில் நடைபெறவுள்ளன.
கந்தூரி தமாம் நிகழ்வுகள், (22) புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு தலைப்பாத்திஹா (பெண்கள் மஜ்லிஸ்) நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகி, அஸர் தொழுகையைத் தொடர்ந்து முஹியித்தீன் மௌலித், ஜலாலிய்யா ராத்தீப் மற்றும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து அழுத்கம – ஜெய்லானி கந்தூரி கமிட்டி நடத்தும் ராத்தீப் என்பன நடைபெற்று, இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து நார்ஸா (இராப்போசனம்) வழங்கப்படும். இரவு 9.00 மணிக்கு, குத்பிய்யா மஜ்லிஸ் மற்றும் ஹபீபுல் அவ்லியா குழுவினரின் சிறப்பு பயான் நிகழ்ச்சிகள் நடைபெறுமென, ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், (23) வியாழக்கிழமை சுப்ஹுத் தொழுகையைத் தொடர்ந்து காலை 5.15 மணிக்கு ஹற்றன் – தரீக்கதுல் ஜதுரூஸிய்யத்துல் காதிரிய்யா குழுவினரின் ராத்தீப் மற்றும் முற்பகல் 8.00 மணிக்கு நாகூர் மீரான் ஸாஹிப் மௌலித், முஹ்யித்தீன் மௌலித், ஸுப்ஹான மௌலித் ஆகிய மஜ்லிஸ்கள் நடைபெறவுள்ளதுடன், ழுஹர் தொழுகையைத் தொடர்ந்து விஷேட பயான் மற்றும் நார்ஸா (பகற் போஷனம்) வழங்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வழமைபோன்று, இரவு 9.00 மணிக்கு பக்கீர்மார்களின் ரிபாய் ராத்தீப் நிகழ்வு இடம்பெறுமெனவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் கந்தூரிக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விதவிதமான வசதிகளும் சிறந்த முறையில் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாக சபை மேலும் அறிவித்துள்ளது.
இதுதவிர, பலாங்கொடை பிரதேசத்தை அண்மித்து இருக்கும் வளவ கங்கை மற்றும் அதனைச் சூழவுள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால், ஆற்றில் நீராடுவது, கூடாரம் அமைத்துத் தங்குவது, செல்ஃபி எடுப்பது மற்றும் மீன் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுமாறு, காவல் துறையினர் பக்தர்களிடம் கேட்டுள்ளனர்.

November 21, 2023
0 Comment
13 Views