கொழும்பு
வெளிநாடு செல்வதற்காக வருகை தந்த பெண்ணொருவரின் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவை பாதுகாப்பு பிரிவில் ஸ்கேனிங் இயந்திரத்தை பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய ஹீனடியன பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வெளிநாடு செல்ல விமான நிலையம் வருகை தந்த பெண்ணிடமிருந்து தங்க செயின் மற்றும் பெண்டன் என்பனவற்றை திருடியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபரிடம் பொலிஸார் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில், திருடப்பட்டதாக கூறப்படும் தங்க மாலையை (செயின்) நகைக் கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்