கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலர் மற்றும் களஞ்சியசாலையில் கடமையாற்றிய காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுள் தண்டனை கைதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் குறித்த கைதியுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்தமை தெரியவந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.