- வேட்பாளர் நிமல் லான்சா
இஸ்மதுல் றஹுமான்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேடையில் ஒன்றைக் கூறுகிறார். ஜனாதிபதி கதிரையில் அமரும் போது வேறொன்றைக் கூறுகிறார். இரட்டை சகோதரர்கள் மாதிரி நடிக்கிறார் என புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் நிமல் லான்சா கட்டான, எத்காலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் பொதுவாக ஜனாதிபதி ஒருவர் வெற்றிபெற்றதன் பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டே அடுத்த தேர்தலுக்கு செல்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என ஜனாதிபதி அநுரவுக்குத் தெரியும். ஆனால் மக்கள் அதன அறிந்திருக்கவில்லை. அதனால் தான் பொதுத் தேர்தலை அவசரமாக வைக்கிறார்.
மக்கள் அநுர குமார கூறிய 75 வருட சாபம், அமைச்சர்கள் களவு செய்தமை, ஊழல் மோசடியில் ஈடுபட்டமை மற்றும் உழைக்கும் போது செலுத்தும் வரியின் மட்டத்தை அதிகரித்தல், வட் வரியை குறைத்தல், சம்பள உயர்வு, பிணை இல்லாமல் கடன் வழங்கள் போன்ற வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தனர்.
மேடையில் பேசும் அநுர குமார ஒருவர் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து பேசும் அநுர குமார் இன்னொருவர். இரட்டை சகோதரர்கள் போல் நடிக்கிறார். மேடைக்குச் சென்றால் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறார். பழைய அரசுகளின் ஊழல் மோசடிகளைப் பற்றி பேசுகிறார். ஜனாதிபதி கதிரையில் அமரந்தவுடன் அவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. அப்படி என்றால் இரட்டை சகோதரர்களுக்கு மக்கள் ஏமாந்துள்ளனர்.
ஜனாதிபதி கதிரையில் இருக்கும் போது ஐ.எம்.எப். தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவின் வேலைதிட்டத்தை அமுல்படுத்த பேசுகிறார். மேடைக்குச் சென்றால் ஐ.எம்.எப் ஒப்பந்தத்தை திருத்துவதாக தெரிவிக்கிறார். இது மக்கள் மீது சுமத்தியுள்ள பாரிய சுமை. மத்திய வங்கி ஆளுனர், திறைச்சேரி செயலாளர் ஆகியோரை அகற்றுவதாக கூறுகிறார். கதிரைக்கு வந்தவுடன் அவர்களுடன் இணைந்து வேலைசெய்கிறார். இரட்டை சகோதரர் இல்லாவிட்டால் இவ்வாறு செயல்பட முடியுமா?
ரணில் 16 குடைகள் கேட்டுள்ளதாகவும் அதனை கொடுக்கவா என மேடையில் கேட்கிறார். அவர் நினைக்கிறார் மழை செய்தால் ரணில் 16 குடைகளை பிடிக்கிறார் என்று. அப்படிக் பார்த்துள்ளீர்களா? மேடையிலுள்ள அநுர வாய்வீச்சு, கதிரையில் உள்ள அநுரவுக்கு ஒன்றும் இயலாது எனக் கூறினார்.