இஸ்மதுல் றஹுமான்
முஸ்லிம், தமிழ் கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி வடக்கு, கிழக்கு, தெற்கு மலையக தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் அநுர குமார சகோதரர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இம்முறை தேசிய மக்கள் சக்தி ஊடாகவே கூடுதலான முஸ்லிம்கள் பாராளுமன்றம் செல்வார்கள். அரசாங்கம் தவறு செய்வதாக இருந்தால் தான் பலமான எதிர்கட்சி தேவை. நாம் அப்படி தவறு செய்யமாட்டோம் என தேசிய ஆசிரியர் தொழிற்சங்க செயலாளரும் கம்பஹா மாவட்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளருமான மஹிந்த ஜயசிங்க நீர்கொழும்பு, பெரியமுல்லை, றஹுமானாபாதில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் எமது நாட்டை மாறி மாறி ஆட்சிசெய்த பச்சை நீலம் கட்சிகளுக்கு தற்போது இடமில்லை என்பது ஜனாதிபதி தேர்தலில் நிரூபனமாகியுள்ளது. இனிமேல் ஊழல்,மோசடி உள்ளவர்களுக்கு இடமில்லை. எம்மைப் பிரிப்பதற்காக பொய்யான கதைகளை கட்டினார்கள். தே.ம.ச. வெற்றிபெற்றால் முஸ்லிம்களுக்கு தாடி வைக்க முடியாது, விகாரைகளில் பிக்குகளுக்கு தானம் வழங்க மாட்டார்கள் வெளிநாட்டு தூதுவர்கள் தொடர்பை துண்டித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற பிழையான தகவல்களை சமூக மயப்படுத்தினார்கள்.
இவற்றைப் கருத்தில் கொள்ளாத மக்கள் திசைகாட்டிக்கு வாக்களித்தார்கள். ஹக்கீம், றிசாட் பதியுதீனின் முஸ்லிம் கட்சிகளினதும் தமிழ் கட்சிகளினதும் ஒத்துழைப்பு இன்றி வடக்கு கிழக்கு தெற்கு மலையக தமிழ், முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அநுர சகோதரர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
முஸ்லிம் கட்சிகளின் ஊடாகவன்றி தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளாக இம்முறை கூடுதலான முஸ்லிம்கள் பாராளுமன்றம் செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அந்த வகையில் முனீர் முலப்பர் கம்பஹா மாவட்டத்திலிருந்து முஸ்லிம்களின் ஆதரவுடன் மாத்திரமன்றி சிங்களம் மக்களின் வாக்குகளுடனும் பெளத்த பிக்குகளின் ஆசிர்வாதத்துடனும் இம்முறை பாராளுமன்றம் செல்வார். எமது கட்சி பட்டியல்களில் தகுதியான சிறந்த வேட்பாளர்கள் போட்டி போடுவது மாத்திரமன்றி எதிர் வரும் பாராளுமன்றத்தில் திசைகாட்டியில் கூடுதலான முஸ்லிம் எம.பி. கள் இருப்பார்கள்.
மக்களை ஏமாற்றி வேற்றுமையை விதைத்த யுகம் முடிவுற்றுள்ளது. உங்களை தலைமை தாங்கிய முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சிங்களம் மக்களிடையே பகைமையை உருவாக்கி பிரித்து வைத்தனர்.
ஹக்கீம், றிசாட், அத்தாவுல்லா ஆகியோர்களின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன.
சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பேகர் சகல மக்களும் ஒற்றுமையாக வாழும் நாடே எமக்குத் தேவை. அந்த நாட்டை கட்டியெழுப்ப திசைகாட்டிற்கு முடியும்.
தோல்வியடைந்த சஜித், ரணில், நாமல் முகாம்கலில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
முனீர் முலப்பர் தேசிய மக்கள் சக்தியை உருவாக்க பங்களிப்பும் செய்தவர். இன நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர். முஸ்லிம்கள் மத்தியில் தே.ம.ச. தொடர்பாக பரப்ப்பட்ட பிழையான கருத்துக்களை தகர்தெரிந்தவர்.
செப்டம்பர் 21ல் ஆரம்பித்த பயணத்தை தொடர பலம்வாய்ந்த ஆட்சி தேவை. சகல இனங்களினதும் உரிமைகளை பாதுகாத்து இன நல்லிணக்கத்துடன் அரசியல் அமைப்பை தயாரிக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்கள் மட்டும் காவுகொள்ளப்படவில்லை. கத்தோலிக்க முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. பொறுப்புக்களை கூற வேண்டிய உண்மையானவர்களை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.மத்திய வங்கி கொள்ளை தொடர்பாக ரணிலை விசாரிக்க வேண்டும். பிள்ளைகளின் கல்வி உரிமைகளை பரித்தமை, சீனி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி போன்ற பல குற்றச் செயல்களை செய்துள்ளனர். சகல குற்றச் செயல்களையும் உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை, எக்லனிகொட சம்பவம் அனைத்தையும் விசாரிக்க வேண்டும். இதற்காக பலம் வாய்ந்த அரசாங்கம்தான் தேவை. பலம் வாய்ந்த எதிர் கட்சி இருந்து என்ன பலன்?. நாம் பிழை செய்வதாக இருந்தால், அரசாங்கம் தவறான வழியில் செல்வதாக இருந்தால், துரோகம் செய்வதாக இருந்தால் தான் பலமான எதிர் கட்சி தேவை. நாம் ஆட்சி எடுத்த கடந்த 38 நாட்களில் என்ன பிழை செய்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நாம் தவறான வழியில் செல்ல மாட்டோம். எனவே பலமான எதிர்கட்சி அவசியமில்லை எனத் தெரிவித்தார்.