இஸ்மதுல் றஹுமான்
நாம் கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றை குறுகிய முப்பது நாட்களில் நிறைவேற்றுயுள்ளோம். ஏனையவற்றை எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறேன் என்று அமைச்சர் விஜித்த ஹேரத் தீபாவளி தினத்தன்று நீர்கொழும்பு சித்த விநாயகர் கோவிலுக்கு வருகை தந்து வழிபாடகளில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் தீபாவளியைக் கொண்டாடும் உலக மக்களுக்கு ஒளியமான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் சொன்னது ஒன்றையும் செய்யவில்லை என்கிறார்கள். 30 நாட்கள் குறுகிய காலத்தில் எரி பொருட்களின் விலையை குறைத்தோம். மீனவர்களுக்கு எண்ணெய் நிவாரணம் வழங்கினோம். நீர்கொழும்பு மீனவர்களுக்கும் அந்த நிவாரணத்தை பெற்றுக் கொடுத்தோம். உர மானியத்தை 15 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தோம். பாடசாலை மாணவர்களுக்கு பருவகால சீட்டை (சீசன்ரிக்கட்) பயன்படுத்தி சனி, ஞாயிறு தினங்களிலும் பஸ்களில் பயணிக்க அனுமதி அளித்துள்ளோம். புகையிரத சேவை ஊழியர்களுக்கு தமது வீடுகளில் இருந்து சேவை இடத்திற்கு இலவசமாக புகையிரதத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இது காலவரையும் அமைச்சர்கள் உறுப்பினர்கள் பயணிக்கும் போது பாதுகாப்புக்காகச் செல்லும் மக்கள் எதிர்க்கும் பாரிய வாகன பேரணி கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தோம்.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையை சுற்றியிருந்த மதிற்சுவர்கள், தடைகளை அகற்றி எவரும் அப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துப் செய்யகூடிய விதத்தில் திறந்து விட்டுள்ளோம். இவைகள் மூலம் எமது நாட்டை மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். அதற்காகவே பலமான அரசியல் குழு ஆட்சியை கைபற்றியுள்ளது.
முன்னைய காலங்கலுடன் ஒப்பிடும் போது பொதுத் தேர்தல் பிரச்சார காலம் ஜனநாயக ரீதியில் மிகவும் அமைதியான முறையில் நடக்கின்றன. கடந்த காலங்களில் தேர்தல் நடக்கும் போது அடிதடி, ஆட்பலி, வன்முறை , மோதல் விருப்பு வாக்குச் சண்டை எல்லாம் நடக்கும். இம்முறை தேர்தல் ஒன்று இருப்பதாகவே விழங்காத நிலையில் அமைதியாக நடக்கிறது. இதுதான் நாம் செய்துள்ள மாற்றம். எதிர்காலத்தில் மேலும் மாற்றங்களைச் செய்வோம்.
ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு எனக் கூறிய ரணில் அரசு ஏப்ரல் மாதத்தில் ஐயாயிரம் ரூபாவும் அதன் பின்னர் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பும் வழங்குவதாக கூறியதுடன் நிலுவைப் பணத்தை அக்டோபரில் வழங்கைவதாக நாட்டுக்கும் ஊடகங்களுக்கும் கூறினார்கள். இப்படி இருக்கையில் பொது நிர்வாக அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டு நிலுவயை 2025 ல் வழங்குவதாக கூறியது. இதுதான் அவர்களின் பெரிய பொய்.
உதய செனவிரத்ன அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்பித்து தேர்தல் நெருக்கும் போது சம்பளம் அதிகரிப்பதாக கூறினார்கள். ஆனால் நிதி அமைச்சின் எந்தப் பிரிவின் மூலமும் நிதி ஒதுக்கப்படவுமில்லை சிபாரிசுகள் பெற்றுக்கொள்ளவும்
இல்லை. பொய்யைத்தான் சொன்னார்கள்.
உதய செனவிரத்னவின் அறிக்கை தொடர்பாக எமக்கு பிரச்சினை இல்லை. அந்த அறிக்கைக்கு இனங்க நிதி ஒதுக்கப்பவில்லை. நாம் அந்த அறிக்கையை ஆராய்கிறோம். நாம் பொறுப்புடன் இந்த நாட்டின் மக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் கூறுவது அடுத்த வருடம் கட்டாயமாக சம்பளம் அதிகரிக்கப்படும். எவ்வளவு என்பதை நிதி நிலமையை வைத்து தீர்மானிப்போம். நாம் பொய் வாக்குறுதி அளிப்பதுமில்லை அரச ஊழியர்களை ஏமாற்றுவதும் இல்லை. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவிதத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பிற்காக 160- 180 இரானுவத்தினர் அவசியமில்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பு தொடர்பாக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேவையான பாதுகாப்பை வழங்குவோம். அதற்கப்பால் எல்லை மீறியவற்றை செய்வது வெட்கக்கேடானது.
எமக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது என்று பகல் கணவு கான்கிறார்கள். நாம் வந்தால் டொலர் 400 ரூபாவாகும் பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்தனர். இன்று டொலர் 293 ரூபா. பங்குச்சந்தை உயர் அலகை எட்டியுள்ளது.இது மக்களுக்கு மகிழ்ச்சி ரணிலுக்கு கவலை.
ரணில் மூன்று மாதத்தில் அரசை பாரமெடுப்பதாக இருந்தால் அதற்குமுன் அவர் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டி போட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. ரணில் தோல்வி அடைந்தால் வெட்கத்தில் சொல்லும் கதை இது.
சஜித் எப்போதும் தனக்கு இயலாததையே கூறுவார். கடந்த முறையும் சொன்னார். ஆனால் மக்கள் அங்கீகரிக்கவில்லை.
ஊழல், மோசடி, கள்வர்களை உள்ளடக்கியவர்களே எதிர்கட்சியில் உள்ளார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.
அதனால்தான் மக்கள் பலம்வாய்ந்த அரசுடன் இருக்கின்றனர்.
பணம் அச்சிடப்படவில்லை என்பதை மத்திய வங்கி வெப்தளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மைக்குப் புறம்பானது. பொய்யான தகவல். பொய் சொல்வது அவர்களின் தொழில். அந்தத் தொழிலை இன்னும் 14 நாட்களுக்கே செய்ய முடியும் என்றார்.