தற்போது நிலவும் கடவுச்சீட்டு பற்றாக்குறை மேலும் அதிகரிப்பதை தடுப்பதற்காக, புதிய கேள்விப்பத்திரங்களை அழைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
எனினும், இந்த கேள்விப்பத்திர நடவடிக்கைக்கு சில மாதங்கள் தேவைப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (30.10.2024) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள 750,000 கடவுச்சீட்டுகளுக்கான ஒப்பந்தம் முடிவடையும் போது புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கூடிய விரைவில் புதிய கேள்விப்பத்திரங்களை அழைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அண்மைய நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புதிய நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் 750,000 கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளது.
இந்த கடவுச்சீட்டுக்கள், அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அமைச்சர் ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த கையிருப்பு அடுத்த சில மாதங்களில் முடிவடையும் போது, புதிய கேள்விப்பத்திரங்களையம் அழைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் கடவுச்சீட்டுகளுக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும் என்று அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்