இஸ்மதுல் றஹுமான்
கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க நைகந்த சுங்க காரியாலயத்திற்கு ஒப்படைப்பதற்காக கொண்டுவரப்பட்ட வழக்கும் பொருட்களில் இருந்த பீடி இலை பொதிகளுக்குப் பதிலாக உக்கிப்போன பீடி இலை பொதிகளை மாற்றிய பொலிஸ் பரிசோதகரும் லொரி சாரதியும் நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினரால்கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுமித் உபாலி வீரசிங்க, லொரி சாரதியான கல்பிட்டி, பள்ளிவாசல்துறை, அம்மாந்தோட்டத்தைச் சேர்ந்த பீட்டர் மஹேந்திரன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாவது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 620 கிலோ கிராம் பீடி இலைகள் (20 பொதிகள்), 1176 கிலோ கிராம் மஞ்சள் (48 பொதிகள்) என்பவற்றுடன் அவற்றை எடுத்துச் செல்வதற்காக ஆயத்தமாக இருந்த லொரியுடன் கல்பிட்டிய பொலிஸாரால் கைபற்றப்பட்டுள்ளன.
இந்த கைபற்றப்பட்ட பொருட்களை வழக்கும் பொருடகளாக கட்டுநாயக்க சுங்க காரியாலயத்தில் ஒப்படைப்பதற்காக அதே லொரியில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகரின் பொறுப்பில் எடுத்து வந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பயணத்தின் இடைநடுவே நீர்கொழும்பு, கட்டுவ பிரதேசத்தில் எவரும் இல்லாத இடத்தில் கைபற்றப்பட்ட பீடி இலைகளுக்குப் பதிலாக பாவனைக்கு உதவாத உக்கிப்போன பீடி இலைகளை அதேமாதிரி 20 பொதிகள் செய்து லொரியில் ஏற்றியுள்ளனர். இச் சந்தர்பத்தில் நீர்கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் ஆலோசணைக்கினங்க பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சந்தன ரனசிங்கவின் தலைமையிலன பொலிஸ் குழுவினர் அவ்விடத்தை சுற்றிவலைத்த சந்தேக நபர்களை கைது செய்தனர்.
நல்ல பீடி இலை பொதிகளை எடுத்துச் செல்வதற்காக அங்கு தயார் நிலையில் இருந்த வேனின் சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.