இஸ்மதுல் றஹுமான்
ஊடகங்களில் விளையாடிக் கொண்டிருக்காமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை களை உடனடியாக வெளியிடவும். மீனவர்கள் நிவாரணம் கேட்கவில்லை. அவர்கள் மண்ணெண்ணெய், டீசல் விலைகளை குறைக்குமாறே கோருகின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கம்பஹா மாவட்டத்தில் புதிய ஜனநாயக கூட்டணியில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் நிமல் லான்சா தெரிவித்தார்.
நீர்கொழும்பு கடற்கரை தெருவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை வைத்திருப்பவர்கள் மிக அவசரமாக அதனை வெளியிட வேண்டும். இது ஊடகங்களில் விளையாடும் நேரமல்ல. அமைச்சர் விஜித்த ஹேரத், உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுகிறார். உதய கம்மன்பில 7 நாட்களில் அறிக்கையை வெளியிடுவதாகக் கூறினார். அவருக்கு அதனை அவ்வாறே செய்யுமாறு கேட்கிறேன்.
நான் அநுர குமார், விஜித்த ஹேரத் ஆகியோருக்கு கூறுவது கத்தோலிக்க மக்கள் அநுர குமாரவில் நூறு வீத நம்பிக்கை வைத்தே ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர். அதனால் உதய கம்மன்பிலவிடம் அறிக்கையை கேட்கத் தேவையில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 3, 4 அறிக்கைகள் உள்ளன. அந்த அறிக்கைகள் ஜனாதிபதி காரியாலயத்திலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அறிக்கைகளில் உள்ளவாறு விசாரணைகள் இடம்பெறாவிட்டால் அல்லது பக்கங்கள் குறைவென்றால் அறிக்கையிட்டவர்களை வரவழைத்து விசாரித்து
அதனை அவசரமாக வெளியிட்டு கத்தோலிக்க மக்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயத்தை பெற்றுக்கொள்ள கொடுக்குமாறு அநுர குமாரவையையும், விஜித்த ஹேரத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.
அப்படி இல்லாமல் சிறு பிள்ளைகள் போல் ஊடகங்களுக்கு முன் வந்து அங்குமிங்கும் விவாதித்து விரல் நீட்டி குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கத்தோலிக்க திருச் சபையும் கத்தோலிக்க மக்களும் உற்சாகத்துடன் எதிர்பார்ப்பது இந்த அறிக்கைகள் வெளிவருவதையே.
ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்த சகலதையும் நிறைவேற்றினார். அவர் நாட்டை பொறுப்பேற்கும் போது அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத நிலமை இருந்தது. சிறிது காலத்தில் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினார். அவர் நல்லாட்சி காலத்திலும் 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு செய்தார். அதே போல் சம்பள முரன்பாட்டை தீர்க்க குழு அமைத்தார். அதன் பரிந்துரைக்கமைய 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கான அமைச்சரவை அங்கீகிரத்தையும் பெற்றார். ஆனால் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு அமைய அது நிறுத்தப்பட்டது. ஜனவரி மாதம் முதல் அதனை வழங்குவதாக கூறப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பள அதிகரிப்பு செய்வதாக கூறியது. ரணிலின் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால் தே.ம.ச. வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். ஏனெனில் 80 சதவீதமான அரச ஊழியர்கள் உங்கள் மீது பூரண நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள்.
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துளளனர். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு செய்யாவிட்டால் நீங்கள் பயிற்றுவிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அவர்கள் செல்வார்கள்.
அரசியல் கலாசசாரத்தை மாற்றி முறைமை மாற்றத்தைச் செய்வதாக கூறினார்கள். ஒரு மாற்றமும் இடம்பெறவில்லை. நாட்டு மக்கள் இவர்கள் தொடர்பாக அவதானத்துடன் நோக்குகின்றனர்.
ரணில் விக்ரமசிங்க சர்வதேச தொடர்புகளை பயன்படுத்தி பாரிய வேலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அப்படி செய்ய முடியாதென்றே சர்வதேச தொடர்புள்ள ரணிலை அகற்றிவிட்டு அநுர குமாரவை மக்கள் கொண்டுவந்தனர். நாம் வந்தால் கடன் எடுக்கமாட்டோம் போன்ற பல காரணங்களைக் சொன்னார்கள். தற்போது அதற்கு தலைகீழான மாற்றங்களை செய்கின்றனர். மேடைகளில் கூறியதற்கு மாற்றமாக செயல்படுவார்கள் என்று மக்கள் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்.ரணில் விக்ரமசிங்கவின் வேலை திட்டங்களை அவ்வாறே எடுத்துச் செல்வதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அதுவே மக்களுக்கு சிறந்த பொருளாதாரத் திட்டம்.
இவர்களுக்கு சர்வதேசம் தொடர்புகளை பேனும் அறிவில்லை. இந்தியாவுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் போது கவணமாக இருக்க வேண்டும். காரணம் இந்தியா இன்று உலகின் மூன்றாவது வல்லரசு. இலங்கைக்கு மிக முக்கியமான நாடு. இந்தியாவுடனான ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிப்பது என்பது கைகளை சுட்டுக்கொள்வதாகும். சகல காரணங்களையும் நன்றாக பரிசீலித்தே எமது அரசு இந்தியாவுடன் ஒப்பந்தங்களை செய்துகொண்டது. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் எமக்கு சாதகமானது. இது தொடர்பாக மீள் பரிசீலனை செய்வதென்பது காலம் கடத்துவதாகும்.
சர்வதேசத்திடமிருந்து கிடைக்கும் உதவிகள், செயற்திட்டங்கள், முதலீடுகள் என்பவற்றை ஒத்திவைப்பது என்பது நாட்டை பின்னோக்கி கொண்டுசெல்வதைக் குறிக்கும். இதனை ஒத்திவைப்பதல்ல யார் வந்தாலும் தேசங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களை அமுல்படுத்தி நாட்டுக்கு சிறந்த முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்,. டொலரின் மதிப்பு குறையும் போதும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. முட்டை, தேங்காய், வெங்காயம், கிழங்கு போன்றவற்றின் விலைகள் இந்த அரசு பொறுப்பேற்கும் போது இருந்த விலையை விட அதிகரித்துள்ளன. ரூபாவின் பெறுமதி பலமடையும் போது இறக்குமதி பொருட்களின் வேலைகள் குறைய வேண்டும். ஆனால் அப்படி இலலை. இவர்களுக்கு நாட்டை ஆட்சி செய்த அனுபவம் இல்லை. புதியவர்கள் வந்தாலும் இதே நிலமைதான். ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கையை முன்னெடுப்பதனால்தான் அவர்களால் வெற்றிகொள்ள முடிந்துள்ளது. அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் தோல்வி. அதனால் ரணிலின் திட்டத்தையே முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்கிறேன்.
மீனவர்கள் தொடர்பாக லான்சா கருத்துத் தெரிவிக்கையில் மீனவர்கள் ஒருநாளும் நிவாரணம். கேட்கவில்லை. அவர்கள் பல்வேறு படிவங்களை நிரப்புவதற்கோ, அதிகாரிகளின் பின்னால் செல்வதற்கோ விருப்பமில்லை. விலை குறைப்பயே கேட்கின்றனர். எரி பொருள் நிவாரணம் அன்றி மண்ணெண்ணெய், டீசல் என்பவற்றின் விலைகளை குறைக்குப்படியே மீனவர்கள் கேட்கின்றனர். இது நியாயமான கோரிக்கையே.
விலையை குறைக்க முடியாவிட்டால் ரணில் விக்ரமசிங்கவின் நிவாரணத் திட்டத்தை மீனவர்களுக்கு வழங்கவும் என
தெரிவித்தார்.