பாதுகாப்பு அமைச்சினால் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தனி நபர்களுக்கு உரிமத்தின் அமைய வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையை இரத்துச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்படடுள்ளது.
எவென்ரா ஹோட்டல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எச்.டி. நவிந்தக டி சில்வாவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இதன் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி சனத் விஜயவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தனக்கு விடுக்கப்பட்ட கடுமையான அச்சுறுத்தல்கள் காரணமாக பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி பத்திரத்தின் கீழ் துப்பாக்கிகளை பெற்றதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அரகலய போராட்டத்தின் போது தனது ஹோட்டல்கள் கடுமையாக சேதமடைந்ததாகவும் அதனால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், உரிமத்தின் கீழ் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கடந்த 7ஆம் திகதி அறிக்கை விடுத்துள்ளதாக தமக்கு அறியக்கிடைத்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தினால் தொழிலதிபர் என்ற வகையில் தமக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், இந்த தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பாதுகாப்புச் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையை வலுவிழக்கச் செய்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்மானம் வெளியாகும் வரை அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.