இஸ்மதுல் றஹுமான்
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறி ரங்காவை பொலிஸார் தேடுகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 28ம் திகதி கொழும்பில் பல இடங்களில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலுக்கு எதிராக அவரது புகைப் படத்துடன் அவரை அவமதிக்கும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இது தொடர்பாக கொழும்பு குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
விசாரணை மேற்கொண்ட புலாய்வு பிரிவினர் சிசிரிவி கமராவின் உதவியுடன் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு பயண்படுத்தி முச்சக்கர வண்டியை அடையாளம் கண்டு அதன் மூலம் இருவரைக் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒட்டுவதற்காக போஸ்டர்களை கொண்டுவந்து கொடுத்தவர், அதனை அச்சிடுவதற்கு ஓடர் கொடுத்தவர், அதற்கு ஆலோசனைகளை வழங்கியவர்கள் என ஏழு பேர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் இதன் பிரதான சூத்திரதாரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறி ரங்கா என
தெரியவந்துள்ளதாகவும்,
ஏழாவது சந்தேகநபரான அநுராதபுரம் உதைப்பந்தாட்டச் சம்மேளன தலைவரும் தேசிய உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் உப தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான தர்ஷித்த சுமதிபால இது தொடர்பாக இரகசிய வாக்குமூலம் அளிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக குற்றவியல் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர். அதற்கமைய நீதிபதியின் உத்தியோகபூர்வ அறையில் இரகசிய வாக்குமூலம் அளிக்கப்பட்டது.
சிறி ரங்காவை கைது செய்ய அவரது கொழும்பு இல்லத்திற்குச் சென்ற போது அவர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாக அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.
ரங்கா இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றால் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான் சந்தேகநபர்கள் ஏழுபேரையும் எதிர் வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு வழக்கை அன்றய திணத்திற்கு ஒத்திவைத்தார்.
வீதி விபத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பா௧ ரங்காவுக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெறுகின்றது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.