கொழும்பு;
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் இதனை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சுயாதீன நிதி அதிகாரம் வழங்கப்படாதவரை உரிய காலத்தில் எந்த தேர்தலையும் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பினர் நேற்று புதன்கிழமை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை தேர்தல் ஆணைக்குழுவில் சந்தித்து கலந்துறையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுக்களை நிராகரித்து தேர்தலை தொடர்ந்தும் நடத்தாமல் இருப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதனால் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இது தொடர்பாக மேற்கொண்டுவரும் நடவக்கைகள் தொடர்பாக கேட்டறிந்துகொள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பினர்கள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினோம்.
அதேபோன்று தேர்தல் சட்ட திருத்தம் மற்றும் ஜனாதிபதி முறைமை திருத்தம் தொடர்பாக இன்று பரவலாக அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.இந்த விடயம் தொடர்பாகவும் அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டிருப்பது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது போன்ற விடயங்கள் தொடர்பாகவும் நாங்கள் கேட்டறிந்தோம்.
இந்த விடயங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் மிகவும் சினேகபூர்வமாக அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக எமக்கு விளக்கமளித்தனர். குறிப்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை எந்த நேரம் வேண்டுமானாலும் நடத்துவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் அதற்கு தேவையான நிதியை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். அதேபோன்று தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துச் சென்ற வழக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்கள்.
என்றாலும் ஆட்சியாளர்கள் தேர்தல் வரைபடத்தை சுருட்டிக்கொள்ளும் பாேக்கையே காணக்கூடியதாக இருக்கிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்திருந்த நிலையில், அரசாங்கம் எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைத்து, தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொள்ள அவசரமாக நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால் தற்போது அந்த நடவக்கைகள் அனைத்தும் தடைப்பட்டிருக்கின்றன. அதனால் தேர்தல் திருத்த நடவடிக்கைகள் வரலாற்றில் எப்போதும் ஆட்சியாளர்களின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
அதேபோன்று தற்போது ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் இறுதிப்பகுதியிலேயே நடக்க இருக்கிறது. அதனால் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படாமல் பிற்போட எடுக்கும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுடள் இணைந்துகொண்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் செயற்பட வேண்டியதன் தேவை தொடர்பாக நாங்கள் தெரிவித்திருந்தோம்.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழு எந்த தேர்தலை நடத்துவதற்கும் தயாராக இருக்கின்றபோதும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி சுயாதீனத்தன்மை இல்லை. அதனால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி சுயாதீனத்தன்மை வழங்கும்வரைக்கும் அவர்களிடமிருந்து தேர்தல் கால அட்டவணைக்கு ஏற்ப உரிய காலத்துக்கு தேர்தலை நூறுவீதம் எதிர்பாக்க முடியாது. ஏனெனில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்த நிலையில் அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்காக நிதி அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தி வந்தது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து உரிய காலத்துக்கு நாங்கள் தேர்தலை எதிர்பார்ப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு நிதி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதேபோன்று பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.