அமெரிக்காவின் நியூயோர்க்கில் யூடியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், யூடியூப் ஷார்ட்ஸில் செயற்கை நுண்ணறிவை கொண்டு வர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் யூடியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவனத்தின் C.E.O. நீல் மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ. மூலம், யூடியூப்பில் ஷார்ட்ஸ் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் டீப் மைண்ட் உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஇஓ மூலம், யூடியூப் ஷார்ட்ஸில் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் ஷோர்ட்ஸில் ஏ.ஐ. மூலம், பெக்ரவுண்டை மாற்ற முடியும். அதேபோல், ஆறு வினாடிக்கு தனியாக ஷொர்ட்ஸ் உருவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ.ஐ. உதவியுடன் பெக்ரவுண்டை மாற்றும் வசதி இந்த ஆண்டு இறுதி அறிமுகம் செய்யப்படும் என்றும், ஆறு வினாடி அளவுக்கு தனியாக ஷொர்ட்ஸ் உருவாக்கும் வசதி 2025ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யூடியூப் பயனர்கள் தங்களின் தம் நைல், தலைப்பு ஆகியவற்றை இந்த ஏ.ஐ. உதவியுடன் மேற்கொள்ள முடியும். அதேபோல், வீடியோவுக்கான யோசனைகளையும் இந்த ஏ.ஐ. உதவியுடன் பெற முடியும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த வசதியும் இந்த ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் வீடியோக்கள் மீது ‘ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது’ எனும் லேபல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.