கண்டி பிரதேசத்தில் பெருந்தொகையான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றிற்கு, அதனை அண்மித்த மக்களால் பெருமளவிலான கழிவு நீர் வெளியேற்றப்படுவது 01.10.2024 கண்டறியப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கண்டி, ஹரிஸ்பத்து, பூஜாபிட்டிய, பாததும்பர, அக்குறணை, குண்டசாலை உள்ளிட்ட பல பிரதேசங்களின் குடிநீர் தேவைக்காக நீரை பெறும் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் அண்மையில் புனரமைப்புக்காக திறக்கப்பட்டன.
இதேவேளை, சுகாதார திணைக்களம், பொலிஸ், சுற்றாடல் அதிகாரசபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரசபைகளின் பங்களிப்புடன் பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் நேற்று விசேட பரிசோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் மூலம், அப்பகுதியில் உள்ள மகாவலி ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் 50% குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கழிவுகள் மற்றும் கழிவு நீரை நேரடியாக நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் விடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், மற்றவர்களுக்கு 2 வாரங்களுக்குள் கழிவு நீர் அமைப்புகளை முறையாக அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.