களுத்துறை மாவட்டத்தின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் (வயது 74) திடீர் மறைவு களுத்துறை மாவட்ட மூவின மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது தகப்பனார் மர்ஹூம் எம்.எஸ்.எம். பளீல் ஹாஜியாருடன் ஏக காலத்தில் ஒரே கட்சியில் அரசியல் செய்த அவர், எமது குடும்பத்துடனும் என்னுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். நான் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றபோது என்னை பாராளுமன்றத்தில் நேரடியாக சந்தித்து என்னை வாழ்த்தியதோடு, அவரது உளப்பூர்வ பாராட்டுகளையும் தெரிவித்தார்.
அதேபோல், களுத்துறை மாவட்டத்தின் மதுகம தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி தான் இறக்கும் வரை மக்கள் பிரதிநிதியாக செயற்பட்டார். பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக நீண்டகாலம் தொடர்ந்தும் எமது மாவட்டத்தை அலங்கரித்தார். தன்னை விட தனது மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டதோடு தான் இறக்கும் வரை இனவாதமற்ற தூய்மையான அரசியல் பணியை மேற்கொண்டார்.
இனவாதத்தை ஒருபோதும் விரும்பாத அவர், எமது மாவட்டத்தின் மூவின மக்களுக்கும் எவ்வித பேதமுமின்றி பணிபுரிந்தார்.
அன்னாரின் இழப்பு எமது களுத்துறை மாவட்டத்தின் மூவின மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகுமென்றும் மர்ஜான் பளீல் தனது அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.