குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இலத்திரனியல் விசா முறை தொடர்பாக அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பாக இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ப்ரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க, அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு, இந்த வழக்கை விசாரணைக்ககாக ஜனவரி 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், இலத்திரனியல் விசா முறையை அமுல்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்தது.