இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வட்ஸ் அப், மெசேஞ்சர் உள்ளிட்ட செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா, பயனாளர்கள் வசதிக்காக பில்டர் வசதியை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
இதற்காக இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அழகை மெருகூட்டும் வகையில் மெட்டா ஸ்பார்க் ஏ.ஆர் என்ற மூன்றாம் தரப்பு இயங்குதளத்தை அறிமுகம் செய்தது. இது பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த செயலியை இளைஞர்களும், இளம்பெண்களும் பயன்படுத்தி தங்களது புகைப்படங்களை அழகுபடுத்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பெண்கள் அதிகளவில் இந்த பில்டர் வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
விளையாட்டுத்தனமான விலங்கு காதுகள் முதல் டிஜிட்டல் மேக்கப் வரை அனைத்தையும் கொண்டு செல்பிகள் மற்றும் ரீல்ஸ்களை உருவாக்கி சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து அதிக லைக்ஸ்களை பெற்று வந்தனர். மற்றொரு புறம் அழகுபடுத்தும் AR பில்டர்களின் பயன்பாடு இளம் பெண்களின் மன ஆரோக்கியம் மற்றும் உடல் உருவ பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டு எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், மூன்றாம் தரப்பு பில்டர் வசதிகள் வரும் 2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் நீக்கப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான AR எபெக்ட்ஸ் பயனர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனாளர்களுக்கு அடுத்த தலைமுறை அனுபவத்தை வழங்கும் வகையில் glasses உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் விதமாக ஸ்பார்க் இயங்குதளத்தை மூடுவதாகவும் மெட்டா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.