தவறான தீர்மானத்தை எடுத்தால் கிரீஸில் நடந்தது போல் VAT வரியை 13% – 23% ஆக அதிகரித்து அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீத்தினால் குறைக்க வேண்டிய நிலை வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று (14) நடைபெற்ற யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளோம். ஆனால் நாம் புதிய பொருளாதார முறையுடன் நிலையாக முறைமையொன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அடைந்துகொண்ட ஸ்திரத்தன்மையை பலப்படுத்த வேண்டும்.
இதுவரையான பயணத்தின் போது, பணம் அச்சிடுவதை நிறுத்துவது, அதிக கடன் பெற்றுக்கொள்வதை நிறுத்துவது போன்ற கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் இதற்கான ஆலோசனைகளை வழங்கியது.
அரசாங்க வருமானத்தை அதிகரிக்க VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இதனால் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து டொலரின் பெறுமதியும் 300 ரூபாயாக குறைந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 10% – 40% வரை குறைந்தது.
அது போதுமானதல்ல இன்னும் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். அடுத்த வருடம் ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடையும் போது வாழ்க்கைச் செலவை இன்னும் குறைக்க முடியும்.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கை மீண்டும் வீழ்ச்சியடையாமல் தற்போதுள்ள ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக செயற்பட வேண்டும்.
எனது எதிர்தரப்பு வேட்பாளர்கள் வரி குறைப்பு தொடர்பில் பேசுகின்றனர். வரிகளை குறைப்பதையே நானும் விரும்புகிறேன். இருப்பினும் பொருளாதாரத்தை பாதகத்தில் தள்ளிவிட்டு அதை செய்ய முடியாது.
தவறான தீர்மானத்தை எடுத்தால் கிரீஸில் நடந்தது போல் VAT வரியை 13% – 23% ஆக அதிகரித்து அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீத்தினால் குறைக்க வேண்டிய நிலை வரும்.
கிரீஸ் எதிர்கொண்ட விளைவினால் சிலர் தொழிலையும் இழந்தனர். தொழில் இரத்து மற்றும் வருமான குறைப்பை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.
போதிய வெளிநாட்டு வருமானம் இல்லாமல், இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் தங்கியிருக்க முடியாது. வீட்டுக்காக வாங்குவதை போல் தொடர்ந்தும் நாம் கடன் வாங்க முடியாது. எனவே, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக கொண்ட நாடாக மாற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.