ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 15.09.2024 நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 323,879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் பரீட்சார்த்திகள் அனைவரும் காலை 09.00 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்தில் அமருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பரீட்சைக்கு பின்னரும் மாணவர்களின் மன நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென உளவியலாளர் ரூமி ரூபன் கூறுகிறார்.