கடந்த 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களில் அரசியலமைப்பின் 79 உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 13.09.2024 தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், ஏனைய நாடுகளின் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை இலங்கையில் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்கும், (93 ஆம் அத்தியாயமான) வெளிநாட்டுத் தீர்ப்புக்களின் வலுவுறுத்துகைக் கட்டளைச்சட்டம் மற்றும் (94 ஆம் அத்தியாயமான) தீர்ப்புக்களின் பரஸ்பர வலுவுறுத்துகைக் கட்டளைச்சட்டத்தை நீக்குவதற்கும், அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலமாகும்.
அதற்கமைய, இந்த சட்டமூலம் 2024ஆம் ஆண்டு 49 ஆம் இலக்க வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமாக அறியப்படும்.
அத்துடன், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தை நிறுத்துவதற்கான சட்டமாகும். அதற்கமைய, இந்த சட்டமூலம் 2024ஆம் ஆண்டு 50 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமாக அறியப்படும்.