சுஐப்.எம்.காசிம்-
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்குள் அடுத்த வருடம் எதிர்கொள்ளவுள்ள தேர்தலும் பெரும் தலையிடியாகவே இருக்கும். ஏற்கனவேயுள்ள பொருளாதார நெருக்கடிக்குள் தேர்தலுக்கு நிதி ஒதுக்குவதை விடவும் வேட்பாளர்களைத் தேடுவதுதான் பெரும் பிரச்சினைகளாகப் போகின்றன. எந்தத் தேர்தல் நடைபெறும் என்ற ஆருடங்களை சொல்ல முடியாதிருந்த நிலை நீங்கி, பொதுத் தேர்தல்தான் எனுமளவுக்கு கள நிலைமைகள் வெளிச்சமடைந்துள்ளன. இதனால், சோம்பலை முறுக்கிக்கொண்டு முனைப்புடன் செயற்பட அரசியல் கட்சிகள் தயார். ஆளும் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எப்போதோ சோம்பலைத் தூக்கி வீசிவிட்டு ஆடுகளத்திலேதான் நிற்கின்றன.
ஆனால், போட்டிதான் இன்னும் ஆரம்பமாகாதுள்ளது. நடுவர்கள் எந்த நிலைப்பாட்டிலிருந்தாலும் அடுத்த வருடம் போட்டியை நடத்தவே நேரிட்டுள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பா தயாராக இல்லை. ஆணையைப் பெற்றால்தான், அடுத்த கட்ட ஆதரெவென்றுவிட்டன ஐ.எம்.எப் உள்ளிட்ட ஏனைய நிதி நிறுவனங்கள். இதனால், தேர்தல் போட்டிக்கு தயாராகிறார் ரணில். நிறைவேற்றதிகாரத்தின் நிழலில் நின்றவாறு பொதுத் தேர்தலை நடத்துவதுதான் உசிதம் எனத்தோன்றுகிறது ரணிலுக்கு. காரணம், யானைக்கும் சில எம்.பிக்களை வென்று, மொட்டையும் வாடி விடாமல் பாதுகாக்க இந்த அதிகாரம் உதவுமென்பதுதான்.
இதில், இன்னொரு வியூகமும் உள்ளது. அதிக எம்.பிக்களை வெல்லும் கட்சியுடன் இணைந்து, தனது கட்சியையும் அரசாங்கத்தின் பங்காளியாக்குவதே அது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவதிலுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில்தான், பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஒருவேளை, மொட்டும் யானையும் பெருமளவு எம்.பிக்களைப் பெற்றுவிட்டால், பேரம்பேசும் வேலைகளை நிறைவேற்றதிகாரம் செய்யலாமல்லவா? இந்த வியூகத்தில்தான் இந்தத் தேர்தலுக்கு தயாராகிறார் ரணில்.
ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களை வென்றால் மொட்டுவின் ஜனாதிபதிக் கனவும் மொட்டு அதிக ஆசனங்களை பெற்றால் யானையின் ஜனாதிபதிக் கனவும் ஊமையனின் கனவாகவே இருக்கும். ஒருவேளை ஊமையன் கண்ட கனவுபோலில்லாமல், “ஒரிஜினல்” கனவாக நனவாவதற்கு மொட்டும் யானையும் ஒன்றாக ஒட்டியும் பொதுத் தேர்தலில் போட்டியிடலாம்.