இளைஞர் யுவதிகளுக்கு உலகளாவிய தரத்திற்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறையில் பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் 12.09.2024 முற்பகல் இடம்பெற்ற “Times School of Higher Education” உயர் கல்விக்கான பாடசாலைத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
வரையறுக்கப்பட்ட விஜய பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்ததாக டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டு, மூன்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச தரத்திற்கு ஏற்ப கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மூன்று முக்கிய தகுதிப் பிரிவுகளின் கீழ் பலதரப்பட்ட தொழில் சார்ந்த கற்கை நெறிகள் இங்கு வழங்கப்படுகின்றன. அதன்படி சான்றிதழ், டிப்ளமோ, உயர் டிப்ளமோ கற்கைகள் மற்றும் டிஜிட்டல் அகடமி ஊடாக தொழில்முறை திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பட்டப்பின் படிப்புகள் இங்கு நடத்தப்படும்.
டைம்ஸ் உயர்கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் விஜய பத்திரிகை நிறுவனத்தினால் நியமிக்கப்படும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்ட ஐந்து பேர் கொண்ட ஆலோசனைக் குழுவால் நிர்வகிக்கப்படும். இளைஞர்கள் எதிர்காலத்தில் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைவதன் மூலம் உலகத் தரத்திற்கு ஏற்ப தரமான கல்வியை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று நிர்வாகக் குழு கூறுகிறது.
இதன் போது “Times School of Higher Education” என்ற புதிய இணையதளத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.