ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்பு இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதற்கு இணையாக அனைத்து ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் (Colombo) நேற்று (04) இடம்பெற்ற ஐக்கிய அரச சேவை ஓய்வூதியதாரர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரச சேவையாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக வழங்கப்பட்ட போது, ஓய்வூதியதாரர்களுக்கு அதில் 25 சதவீதமே வழங்கப்பட்டது.இது பாரிய அநீதியான செயற்பாடாகும்.
எமது அரசாங்கத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாவினை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஓய்வு பெற்ற சகலருக்கும் அக்ரஹார காப்பீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் வேலைத்திட்டமாக ஓய்வூதிய நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்காகத் தேசிய கொள்கைத்திட்டம் ஒன்று வகுக்கப்படும்.
அத்துடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்படும். என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.