2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 03.09.2024 ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாகவும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என்ற திறைசேரியின் இணக்கப்பாடு மற்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் உதய ஆர். சேனவிரத்ன தெரிவித்தார்.
அரச துறையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மறுசீரமைப்பதற்கான நிபுணர் குழு அரச மற்றும் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களை உள்ளடக்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 ஜூன் 12 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தலைமையில், தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிரன்ச கலுதந்திரி, ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ். அலோக பண்டார, நிறுவன பணிப்பாளர் நாயகம் எச்.ஏ. சந்தன குமாரசிங்க, வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா, ஓய்வுபெற்ற சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவருமான துமிந்த ஹுலங்கமுவ, BCS International Technology PTY LTD இன் பிரதம பொது அதிகாரி சந்தி எச். தர்மரத்ன, கொமர்ஷல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள்) இசுரு திலகவர்தன, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜீ.எல். வர்ணன் பெரேரா ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.
குழுவிற்கு 03 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்ப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், 18 விடயப்பரப்புக்களின் கீழ் அரச சேவைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு கொள்கைகள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.