மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அரச சொத்துக்களை உள்ளடக்கி புதிய முதலீட்டு நிறுவனம் ஒன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் அதற்காக புதிய சட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதன் ஊடாக சொத்துக்களை உருவாக்கும் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும் முறையான ஓய்வூதிய திட்டமிடல் முறையை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சனச அமைப்பின் ஊடாக முதியோர்களுக்கான புதிய ஓய்வூதியக் காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு 02.09.2024 முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அடையாளரீதியில் முதியோர் காப்புறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ஸ்திரமற்ற நிலையில் இருந்த வேளையில் தான் நாட்டைப் பொறுப்பேற்று கடினமாக முடிவுகளை எடுத்து நாட்டை மீட்டதாக கூறிய ஜனாதிபதி, மக்கள் பொறுமையாக செயற்பட்டிருக்காவிட்டால் இன்று பங்களாதேஷைப்போன்று எமது நாடும் மாறியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.