- நிமல் லான்சா எம்பி
இஸ்மதுல் றஹுமான்
வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சர்வதேசத்தின் ஆதரவையும், அனுபவத்தையும் கொண்ட ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என, நிமல் லான்சா தெரிவித்தார்.
ஜா-எலாவில் இடம்பெற்ற சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்காவிற்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது நிமல் லான்சா மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
வீழ்ச்சியடைந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க தனி ஒருவராக பொறுப்பேற்று
இரண்டு வருடங்களில் மீட்டெடுத்தார்.
எனவே நன்றியுணர்வுடன் இருக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் நன்றிக் கடனை செலுத்த வேண்டும். வீதியில் இறங்கி நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது, எமக்கு எரிபொருள் கிடைக்காமல் இருந்தபோது, மருந்து கிடைக்காமல் இருந்தபோது, மருத்துவமனைகளில் மக்கள் செத்து மடியும் போது, உரம் இல்லாமல் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் இருந்தபோது, நம் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாமல் தவித்த போது, இந்த நாட்டைக் கையேற்க ஒரு நபர் கூட முன்வரவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் நாடு இருந்த நிலைமை நாம் அனைவருக்கும் நினைவிருக்கும்.
அந்த சூழ்நிலையை சற்று நினைவில் நிறுத்திப் பாருங்கள். எமது ஞாபகசக்தி கொஞ்ச நாட்களுக்குத்தான் என, பிரபாகரன் கூறியுள்ளார். சஜித் இந்த நாட்டைக் கையேற்க முன்வரவில்லை. அநுரகுமார முன்வரவில்லை. தனியொரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். பயமின்றி முன்வந்து பொறுப்பேற்றார். அந்த நேரத்தில் நாட்டைக் கையேற்க பயம். வீடுகளுக்கு தீ வைக்கிறார்கள். இந்த நாட்டை
ரணில் விக்ரமசிங்க கையேற்ற பின்னர் என்ன நடந்தது? எரிபொருள், மின்சாரம், எரிவாயு, உரங்கள் கிடைத்தன. பாடசாலைகள் திறக்கப்பட்டன. பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அப்படியானால், நாம் கஷ்டத்தில் இருந்தபோது இந்த நாட்டைக் காப்பாற்ற தனியாக வந்து நாட்டைப் பொறுப்பேற்ற நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
இப்போது அவர் விமர்சிக்கப்படுகிறார். நாட்டை வாய்வீச்சுகள் மூலம் கட்டி எழுப்ப முடியாது. விமர்சிப்பதன் மூலமோ பொய் சொல்வதன் மூலமோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ரணில் விக்ரமசிங்க ஒருவராலேயே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இன்று சர்வதேசத்தின் ஆதரவின்றி இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. ,ரணில் விக்ரமசிங்கவின் இடத்திற்கு சரிசமமாக வைக்கக்கூடிய எவரும் இந்நாட்டில் இல்லை. சஜித் அவர்கள் வேடிக்கையான கதைகளைச் சொல்லிக்கொண்டும், நகைச்சுவைகளை சொல்லிக்கொண்டும் நாடு முழுவதும் சுற்றி வருகிறார். செய்ய முடியாத வாக்குறுதிகள் வழங்கி வருகிறார்.
வாக்குறுதிகளை வழங்கலாம் ஆனால், இந்த நாட்டை வழிநடத்த வேண்டுமானால் சிறந்த மூளை இருக்க வேண்டும். சர்வதேச தொடர்புகள் இருக்க வேண்டும். நல்ல அனுபவம் இருக்க வேண்டும். ஏற்கனவே செய்த அனுபவம் இருக்க வேண்டும். சஜித்துக்கோ அநுராவுக்கோ அனுபவமில்லை. செய்த விடயம் எதுவும் இல்லை. பேசத்தான் முடியும். ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் இந்த நாட்டை மீட்க முடியும். எதிர்காலத்தில் இந்த நாட்டை பாரிய அளவில் கட்டி எழுப்ப முடியும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தாமதமாக ஆரம்பித்தாலும், ரணில் விக்ரமசிங்க இன்று முன்னணியில் இருக்கிறார். எனவே, இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, எமது நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவரான ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றார்.