இஸ்மதுல் றஹுமான்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை நினைவு கூற காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பிரிட்டோ பிரனாந்து கருத்துத் தெரிவிக்கையில் 2010 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் முதல் தடவையாக சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த தினத்தை உலகின் பல்வேறு நாடுகளிலும் நினைவு கூறப்படுகின்றன.
அந்த வகையில் நாமும் இன்று 30ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அத் தினத்தை நினைவு கூறவுள்ளோம். மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வுக்கு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, விஜயதாஸ ராஜபக்ஷ உட்பட இடதுசாரி வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
இங்கு காணாமல் போனவர்கள் தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று அவர்களிடம் கையளிக்கப்படும். அதற்கு அவர்கள் தேர்தலுக்கு முன்னர் பதில் வழங்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் கலாநிதி தீபிக்கா உடுகம விஷேட சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் அன்றைய தினம் காலை வேளையில் இலங்கையிலுள்ள தூதரகங்களுக்குச் சென்று எமது கோரிக்கை அடங்கிய ஆவனம் கையளிக்கப்படும்.
காணாமல் ஆக்கப்படுவது மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கே முயற்சிகள் எடுக்கப்படுகின்றன
நீதி நிலைநாட்டப்படும் வரை இலங்கையை ஜெனீவாவின் நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேணடும் எனவும் கோருகின்றனர்.