( ஐ. ஏ. காதிர் கான் )
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் போர் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட இளைஞரை, 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு, நீதிமன்றம் இன்று (29) அனுமதி வழங்கியுள்ளது.
இம்மாதம் 22 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, இரத்மலானை ஐந்தாவது ஒழுங்கை, பொருபன வீதியைச் சேர்ந்த இமாட் ஷமாம் என்ற சந்தேக நபரைத் தடுத்து வைத்து விசாரணை நடத்த, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க அனுமதியளித்தார்.
குறித்த சந்தேக நபரான ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய காணொளிகளை ‘எடிட்’ செய்து, தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் ஊடாக சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக, நீதிமன்றில் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், இந்த சந்தேக நபரிடம், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடிகளில் குறிப்பிடப்பட்ட சின்னங்கள் அடங்கிய மோதிரங்கள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்தச் சந்தேக நபரின் தொடர்பு நடவடிக்கைகள் காரணமாக, தீவிரவாத மற்றும் பயங்கரவாத சிந்தனைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக,அவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்குமாறும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.