யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் கடந்த வாரம் தாக்கப்பட்ட மசகு எண்ணெய்க் கப்பல் செங்கடலில் தொடர்ந்தும் தீப்பிடித்து எரிவதுடன், அதிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என பெண்டகன் கூறுகிறது.
கடந்த புதன்கிழமை இரண்டு சிறிய படகுகளிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மூன்று எறிகணைத் தாக்குதல்களால் கிரேக்கத்திற்கு சொந்தமான குறித்த கப்பல் தீப்பற்றியதுடன், அதன் இயந்திரமும் செயலிழந்தது.
அதிலிருந்த 25 பணியாளர்கள் மறுநாள் ஐரோப்பிய போர்க்கப்பலால் மீட்கப்பட்டனர்.
எனினும், அந்தக் கப்பலைக் மீட்பதற்கு இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்ட போதிலும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பென்டகனின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் தெரிவித்துள்ளார்.
அந்த எண்ணெய்க் கப்பலில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் டன்கள் அல்லது ஒரு மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெய் உள்ளது.
அந்த கப்பலிருந்து பாரிய எண்ணெய்க் கசிவு ஏற்படுமாயின் அது வரலாற்றில் மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு சம்பவமாகப் பதிவாகும் சாத்தியம் உள்ளதாக பென்டகனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.