( ஐ. ஏ. காதிர் கான் )
‘சத்திய எழுத்தாளர்’ கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி எழுதிய “மாநபி பேசாத மௌன மொழி தமிழ்” நூல் வெளியீட்டு விழா, நேற்று (26) மாலை கொழும்பு – 07, ஜே.ஆர். ஜயவர்தன நிலையத்தில், ‘முஸ்லிம் மீடியா போரம்’ தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.
இதில், சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் சிறப்புரையாற்றினார்.
‘அம்ஜா டிரவல்ஸ்’ உரிமையாளர் அல்ஹாஜ் எச்.எம். அம்ஜதீன், நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
நூலின் சமர்ப்பணப் பிரதி, நூலாசிரியரின் துணைவியார் சம்சுல் நிஹாருக்கு வழங்கப்பட்டது.
வரவேற்புரையை டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி ஆசிரியர் இர்ஷாத் ஹுசைன் நிகழ்த்தினார். வாழ்த்துக் கவிதைகளை ‘சந்தக்கவிமணி’ கிண்ணியா அமீர் அலியும், கவிஞர் வாழைத்தோட்டம் வஸீரும் பாடினர்.
‘வலம்புரி கவிதா வட்டத்’ தலைவர் என். நஜ்முல் ஹுசைன் வாழ்த்துரை வழங்கினார். ‘வலம்புரி கவிதா வட்டம்’, நூலாசிரியர் நாகூர் கனியைப் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி, சந்தன மாலை சூடி, கௌரவித்தது.
கவிஞர் ரவூப் ஹஸீர் பொன்னாடை போர்த்த, செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் சந்தன மாலை அணிவிக்க, தலைவர் நஜ்முல் ஹுசைன் நினைவுச் சின்னம் வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில், ‘வகவக் கவிஞர்கள்’ பலரும் கலந்து கொண்டனர்.
‘முஸ்லிம் மீடியா போரம்’ சார்பில் தலைவர் என்.எம். அமீன், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம், ஷாதிக் சிஹான், ‘மனித நேயன்’ இர்ஷாத் ஏ. காதர் உட்பட உறுப்பினர்கள் பலரும் நூலாசிரியரை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
‘சட்டத்தரணி’ ரஷீத் எம். இம்தியாஸ், ‘கலாபூஷணம்’ நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் குடும்ப சார்பில் அவரைக் கௌரவித்தனர். கவிஞர் யாழ் அஸீம், நூலாசிரியரை கௌரவித்தார்.
‘வகவச் செயலாளர்’ இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்வினைத் தொகுத்தளித்தார். நூலாசிரியர் நாகூர் கனி ஏற்புரை வழங்கினார்.
இந் நூல் வெளிவர, பெரும் உறுதுணையாக நின்று பாடுபட்ட ‘சத்திய எழுத்தாளர்’ எஸ். ஐ. நாகூர் கனியின் இளைய மகள் டாக்டர் ருஸைக்கா நாகூர் கனி நன்றியுரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.