நாடு எதிர்நோக்கும் எந்தவொரு சவாலையும் முறியடிக்கக் கூடிய திறமையான அணி தன்னிடம் இருப்பதாகவும், அரசாங்க நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்குவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
நாட்டில் விரைவான பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதே தமது இலக்காகும் எனவும், அந்த இலக்கை இதுவரை எட்டியுள்ளதாகவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை பேணுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படுவது மிகவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அதுவே ஒரே வழியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் இலங்கைக்கு கணிசமான நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (26) நடைபெற்ற இலங்கை தொழில் நிபுணர்களின் அமைப்பான OPA வின் 37 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டுக்கான வருடாந்த மாநாடு “இலங்கையின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை நோக்கி” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தொழில் நிபுணத்துவ சங்கங்களின் அமைப்பான OPA, 60,000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 34 துறைகளுக்குள் சேவை செய்யும் 52 உறுப்பினர் சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பாகும்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இலங்கை தொழில் நிபுணத்துவ அமைப்பின் வருடாந்த சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையின் நிபுணத்துவ சங்கங்களின் அமைப்பு (OPA) 60,000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 34 துறைகளுக்கு சேவை செய்யும் 52 உறுப்பினர் சங்கங்களை உள்ளடக்கிய தொழில் வல்லுநர்களின் அமைப்பாகும்.