- தாருண்யட்ட ஜவய அமைப்பின் தலைவர், பிரசன்ன திஸாநாயக்க
இஸ்மதுல் றஹுமான்
கொள்கையளவில் முன்மொழிவுகளை முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளதாக, “தாருண்யட்ட ஜவய” (இளைஞர்களுக்கு சக்தி) அமைப்பின் தலைவர் பிரசன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை சாதகமான முறையில் கட்டியெழுப்ப, நாட்டுக்கு ஜனநாயகக் கொள்கை தேவையாகும். தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பல்வேறு அரசியல் வாக்குறுதிகளை வழங்கி இளைஞர் சமூகத்தின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வரும் நிலையை நாம் பார்த்திருக்கின்றோம். இவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்காமல் இளைஞர் சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் தேசியக் கொள்கை நாட்டுக்கு அவசியமாகும்.
இன்றைய சமூகத்தில் நிலவும் அதீத போட்டி மற்றும் பன்முகத்தன்மை காரணமாக, இளைஞர்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். இது நாட்டின் தேசிய பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் பாதித்துள்ளது. தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் இளைஞர்களின் ஆற்றல் மிகவும் முக்கியமானது. இளைஞர்களின் சக்தியை செயற்றிறன் மிக்கதாகவும், திறமையாகவும் பயன்படுத்த சரியான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
கல்வி உலகமானது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகளாவிய கிராமமாக மாறியுள்ளது. அதனை எதிர்கொள்ளும் இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே தாருண்யட்ட ஜவய அமைப்பின் பிரதான நோக்கமாகும். இளைஞர் சமுதாயத்தினரின் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் எதிர்காலத்தை மலரச் செய்வது எமது பொறுப்பாகும்.
கல்வி, தொழில் பயிற்சி வாய்ப்புகள், வேலை வாய்ப்பு, சமூகப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இளைஞர் சமூகத்தை வழிநடத்தவும், கட்டமைக்கவும் ஒரு தேசியக் கொள்கை நாட்டுக்கு அவசியமாகும். அதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் ஒரு வேட்பாளருக்கே தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களில் அதனை ஆய்வு செய்து “தருண்யட்ட ஜவய” அமைப்பிற்கு ஆதரவளிக்கும் வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாகவும் அதன் தலைவர் பிரசன்ன திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.