எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது கருத்தை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ளது.
வாக்காளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகள் தொடர்பில் குறித்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் ஒரு தலைவர் நாட்டுக்கு தேவை என வலுவாக நம்புவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ஊழல்வாதிகளை பாதுகாக்கும், ஊழல்வாதிகளை ஆதரிக்கும் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க, மக்கள் தங்களின் பெறுமதியான வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வாக்காளர்களை ஏமாற்றுவதை தவிர்க்குமாறும், தேர்தல் பிரச்சார அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இது தொடர்பாக என்ன கூறுகின்றார்கள் என்பதில் கவனமாக இருக்குமாறும் ஜனாதிபதி வேட்பாளர்களை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் தேர்தல் சட்டங்களை மீறுபவர்களால் நாடு நேர்மையாகவும் நியாயமாகவும் ஆட்சி செய்யப்படும் என நம்ப முடியாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் நான்கு பிரதான மதங்களின் விழுமியங்களின் அடிப்படையில் ஜனநாயக மற்றும் தார்மீகக் கோட்பாடுகளுக்கு இணங்க நாட்டை ஆட்சி செய்யும் தலைவரைத் தேர்ந்தெடுக்க பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.