கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு லீற்றர் ஒன்றிற்கு தலா 25 ரூபாய்களை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை நேற்று (21.08.2024) அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், குறித்த தீர்மானத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் சிபார்சுக்கு அமைய, கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு நிதி பங்களிப்பு வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே, விவசாய உற்பத்திகள் ஊடாக சுயபொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் விவசாயத்திற்கான அடிப்படை தேவைகளுள் ஒன்றான உர வகைகள் இலகுவாகவும் தாராளமாகவும் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சரின் முன்மொழிவிற்கு அமைய கடற்றொழில் நடவடிக்கைகளுக்கான அடிப்படைகளுள் ஒன்றான எரிபொருளை கடற்றொழிலாளர்கள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.