ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை 15.08.2024இடம்பெறவுள்ளது.
ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் காலம் 14.08.2024 நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்ததாகவும், அதன்படி 40 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட பின்னர், எழுந்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.
சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களும் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வேட்புமனு தாக்கலை முன்னிட்டு தேர்தல் செயலக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக சுமார் 1000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த காலப்பகுதியில் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக முடிந்தால் அப்பகுதியை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
விசேட பாதுகாப்பு வலயம் ராஜகிரியவில் உள்ள சரண மாவத்தையை உள்ளடக்கியதாக இருப்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அன்றைய தினம் அனைத்து பொது நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என்பதாலும், அப்பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மேற்கூறிய காலத்தில் மூடப்பட்டிருக்கும் என்பதாலும் பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு அணிவகுப்பு அல்லது ஊர்வலங்களும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதைத் தொடங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.